விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு!


விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு!


சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை, மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டியராஜ். அதைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டியராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார். 'சீமராஜா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆண்டு, மே மாதம் ரிலீசான படம் 'மிஸ்டர் லோக்கல்'. 

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இதனிடையே, 4 கோடி ரூபாய் சம்பளப் பாக்கியைக் கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தைத் தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.

11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 

அவ்வாறு செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளைச் செய்வதற்கும், திரையரங்கு வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் (மார்ச் 31) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Comments

Popular posts from this blog