ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு?


ராஜ்யசபாவுக்கு 6 பேர்...போட்டியின்றி தேர்வு?


ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஆறு எம்.பி.,க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. குதிரைப் பேரத்தைத் தவிர்க்க, சுமுக முடிவெடுக்கும் மன நிலையில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இருப்பதாக தெரிகிறது.
தி.மு.க.,வில், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார்; அ.தி.மு.க.,வில், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம், அடுத்த மாதம் 29ம் தேதி முடிகிறது.அதையொட்டி காலியாகும் ஆறு எம்.பி., பதவி களுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி மனு தாக்கல் துவங்கி, 31ம் தேதி நிறைவடைகிறது. ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. ராஜ்யசபா எம்.பி.,க் களை, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர்.தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சியான தி.மு.க.,வுக்கு, சபாநாயக ருடன் சேர்த்து 133; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 18; விடுதலை சிறுத்தைகள்கட்சிக்கு நான்கு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என, கூட்டணியில் மொத்தம் 159 பேர் உள்ளனர்.எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்களும், அதன் கூட்டணியில் வெற்றி பெற்ற பா.ம.க.,வுக்கு ஐந்து; பா.ஜ.,வுக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் என மொத்தம் 75 பேர் உள்ளனர். தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இல்லை.
ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.
அதன்படி அ.தி.மு.க., இரண்டு எம்.பி.,க் களைப் பெற, பா.ஜ., அல்லது பா.ம.க., ஆதரவுதேவை. தி.மு.க., தரப்பில் நான்கு எம்.பி.,க்களை பெற, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் ஆதரவு தேவை. தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., நான்கு பதவிகளுக்கும், அ.தி.மு.க., இரண்டு பதவிகளுக்கும் போட்டியிட வாய்ப்புள்ளது. அதன்படி, இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தினால், ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்வது உறுதியாகி விடும்.அதற்கு பதிலாக, தி.மு.க., ஐந்து இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தினால், ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும்;
குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். பா.ம.க., ஆதரவை பெறவும், காங்கிரசில் சிலரை இழுக்கவும், அ.தி.மு.க., முயற்சிக்கும். அதற்கு போட்டியாக, அ.தி.மு.க.,வில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை அணி மாறி ஓட்டளிக்க, ஆளும் தரப்பில் பேரம் பேசப்படலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்து, தேர்தலை சுமுகமாக நடத்த, தி.மு.க., விரும்புவதால், ஆறு எம்.பி.,க்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் என, ஆளும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பா.ம.க., ஆதரவு யாருக்கு?

ராஜ்யசபா தேர்தலில் போட்டி ஏற்பட்டால், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.ஓட்டெடுப்பு நடந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க.,வை ஆதரிக்கும். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பர். ஆனால், எந்த கூட்டணியிலும் இல்லாத பா.ம.க.,வின் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், யாருக்கு ஆதரவளிப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., 2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியில் சேர வேண்டும் என, காய்களை நகர்த்தி வருகிறது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பங்கள் இருப்பதால், தி.மு.க., கூட்டணிக்கு செல்ல நினைத்து, தி.மு.க. அரசை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறது. ஆனாலும், மத்தியில் பா.ஜ., அல்லாத ஆட்சி அமையும் சூழல் இன்னும் உருவாகவில்லை என்றே, ராமதாஸ் கருதுகிறார். எனவே, அ.தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் பா.ம.க., விமர்சிப்பதில்லை.எனவே, ராஜ்யசபா தேர்தலுக்கு என்ன முடிவு எடுக்கலாம் என்ற ஆலோசனையில், ராமதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- நமது நிருபர் -

Comments

Popular posts from this blog